கற்பகவிருட்சம்

கற்பகவிருட்சம்!

உணவு என்பது உயிர்க்கு அமுது. ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து’ என்பது மணிமேகலை. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ எனும் வள்ளுவரின் வாக்கையும் சொல்வது சுலபம். ‘வீடு தோறும் இரந்து பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்’ என்கிறார் வள்ளலார்.

செங்கல்பட்டு பக்கத்துல சின்ன கிராமத்தில மண்ணெண்ணெய் சில்லரை வியாபாரம் தான் அப்பாவின் தொழிலாக இருந்தது. அப்பொழுது மண்ணெண்ணெய் பயன்படுத்திக் கொண்டிருந்த எல்லோரும் சிலிண்டருக்கு மாறிக் கொண்டிருந்த சமயம். ஊரில் யார் இறந்தாலும் எரிக்கும் வழக்கமுடையோர் எங்களிடம் தான் மண்ணெண்ணெய் வாங்கி செல்வார்கள். ஏழை குடும்பங்களுக்கு சில்லரை வியாபாரமும், ஹோட்டல்களுக்கு மட்டுமே வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒரு ஹால் கிச்சன் கொண்ட நான்கு தனி ரூம்கள் வாடகைக்கு இருந்தது. ஆனால் குடியிருக்க யாருமில்லை.   மண்ணெண்ணெய் விலை ஏறியதால் அதனை வாங்கி விற்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். பல்வேறு பொருளாதார நெறுக்கடிக்களால் குடும்பம் வருமானமின்றி வறுமையில் சிக்கித் தவித்த காலம் அது. வீட்டில் அரிசிக்கு எப்போதும் பஞ்சம் வந்ததில்லை. மூன்று வேளையும் சோறு குழம்பு தான். இட்லி தோசையெல்லாம் அப்ப அம்மா அடிக்கடி செய்யமாட்டாங்க. எப்ப பசிச்சாலும் சோறும் குழம்பும் உண்டு. வீட்டின் தோட்டத்தில் நார்தங்காய் மரமுண்டு. ஊறுகாயும் தண்ணி சோறும் விருந்தாக அமைந்த காலமும் உண்டு!

அப்பாக்கு மரம் செடி கொடின்னா ரொம்ப இஷ்டம். தினமும் தென்னை மரத்துக்கு 30 குடம் தண்ணீர் ஊற்றச் சொல்லி கடுமையாக நடந்து கொள்வார். இரண்டு முருங்கை மரத்துக்கும் தலா 10 குடம் வீதம் ஊத்தணும். தண்ணீர் குழாய்க்கும் மரத்துக்கும் எப்படி பார்த்தாலும் 50 அடி இருக்கும். இடுப்பில் குடத்தை வைக்கும் போதே துணியெல்லாம் ஈரமாக்கிவிடுவேன். மினி குளியல் தான். சில சமயம் ஜாலியா இந்த வேலையை செஞ்சாலும் பல நேரத்தில அப்பாக்கு டிமிக்கி கொடுத்தாலும் தினமும் தண்ணீர் ஊற்றுவது தொடர்ந்து கொண்டே இருந்தது. மரங்களுக்கு தண்ணீர் ஊற்றும் போது குட்டையா தண்ணீ நிக்கனும்னு கட்டளையிடுவார். குட்டையாக்நீர் நிக்கவில்லை என்றால் மீண்டும் உற்றச்சொல்லி வம்பு பண்ணுவார். இப்படியாக நாட்கள் ஓடிக்கொண்டிருக்க முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து வீட்டில் விடுமுறையில் இருந்த போது வருமானமில்லாத சூழ்நிலையில் வீட்டு வாடகைகளை மட்டுமே வைத்து கொண்டு குடும்பச் செலவுகளை பார்த்துக்கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டார் அம்மா. இப்ப மகேந்திரா வர்ல்ட் சிட்டியால எங்க ஊருல வாடகைக்கு வீடு கிடைக்கிறதே அபூர்வம்ங்குற அளவுக்கு எவ்வளவோ வளர்ச்சி அடைஞ்சியிருக்கு. ஆனால் 90களில் அப்படியல்ல. வருமானமில்லாமல் சாப்பாட்டிற்கே மிகவும் கடினமான நிலை வந்தபோது தண்ணி ஊத்தி வளர்த்த ஒரு முருங்கை மரம் காய்க்க துவங்கியது. இன்னொரு மரம் காய் வைக்கவே இல்லை. முருங்கை கீரைக்கு ஒரு மரம், காய்க்கு ஒரு மரம்னு இருந்துச்சி. தென்னை மரமும் பூப்படைந்து அதற்கு புட்டு சுட்டு படைச்சதும் நினைவிலிருக்கு. இளநீர் முற்றி காய் ஆகும் வரை பொறுத்திருந்து சமையலில் சேர்த்துக் கொண்டார் அம்மா. 

இரண்டு முருங்கை மரங்களில் எங்கு பார்த்தாலும் கீரையாக ஒரு மரமும், கீரை இல்லாமல் காய்கள் மட்டுமே நிறைந்திருக்கும் இன்னொரு மரமும் செழிப்புடன் வளர்ந்து இருந்தன. 50, 60 காய்கள் ஒரே வாரத்தில் காய்க்க தொடங்கியிருந்தது. "பார்த்தியா, நீ ஊத்திய தண்ணியெல்லாம் வீணா போகல" என்று சொன்னார் அப்பா. வீட்டின் தேவைக்கு போக மீதமுள்ள முருங்கை காயை தெருத் தெருவாய் இரண்டு ரூபாய்க்கு விற்று வருவேன். அதில் வரும் காசில் முட்டை வாங்கி வந்து ஆம்லெட் போட்டு கொடுக்கச் சொல்வேன். இதற்கிடையில் பரிட்சயமானவர்களுக்கு முருங்கைகாயை காசு ஏதும் வாங்காமலும் கொடுப்பாங்க அப்பவும் அம்மாவும். தினமும் சமையலில் முருங்கை இருந்தது. முருங்காய் சாம்பார் அல்லது முருங்கை காரக்குழம்பு, கீரை கடையல், கீரை பொறியல், சாயங்காலத்துல கீரை அடை என இப்படியே இரண்டு மாதங்கள் வரை ஓட்டியது இன்றும் நினைவில் உள்ளது. சீத்தாபழ மரம், தேக்கமரம், கொய்யாமரம், பப்பாளி மரம், வேப்பமரம், கிச்சிலிக்காய் மரம் என பல வகை மரங்கள் இருந்திருந்தாலும் முருங்கையுடனான என் நினைவுகள் 10 வயதில் இருந்து இப்போது வரை நெஞ்சில் நீங்காமல் நிலைத்திருக்கிறது.

யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வாங்க, ஆனால் முருங்கை மரம் இருந்தால் ஆயிரம் பேருக்கு உணவளிக்க முடியும். தன் சத்துக்களிலும் தன் வாழ் நாள் முழுவதும் சமரசமேயில்லாமல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. காற்றும் மழையும் வீசும் போது முருங்கை மரத்துக்குாஎதுவும் ஆகக்கூடாதுன்னு வேண்டியதெல்லாம் நினைவிருக்கு. கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சத்தை பார்த்ததில்லை. வறியோரின் பசிக்கும் ருசிக்கும் ஆரோக்கியத்திற்கும் ஈடு இணையில்லாமல் சத்துக்களை வாரி வழங்கிய முருங்கை மரம் எங்கள் பசிப்பிணியை போக்கிய கற்பக விருட்சமே ♥ இப்ப முருங்கைக்காயை காசு கொடுத்து வாங்கும் போது வாங்கிய வரத்தை தொலைத்த அனுபவத்தோடு முருங்கை சக்கையாகிவிடுகிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!