நீயும் அயலி! நானும் அயலி!

நீயும் அயலி! நானும் அயலி!

அயலி - ஜீ வெப்சீரியஸில் வெளிவந்திருக்கும் இணையத்தொடர். 

அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், தங்களது பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் பூப்பெய்திய உடனே திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.
பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள், இளம் விதவைகள் என பல்வேறு பாதிப்புகளையும் ஆணாதிக்கங்களையும் அந்த ஊர்ப் பெண்கள் சந்திக்கிறார்கள். இந்த கட்டமைப்புகளில் இருந்து அக்கிராமத்து பெண்கள் மீண்டெழுகிறார்களா இல்லையா என்பது தான் மீதிக் கதை.

திராவிடத்தின் சாதனைகளை விளக்கும் வெப்சீரிஸ் #அயலி. தாய் வழி சமூகத்தில் பிறந்த நாம் வேட்டைக்குழுக்களை வழிநடத்தியவர்களாக பெண்கள் இருந்திருக்கிறார்கள். இன்றும் ஊரின் எல்லைகளிலும் ஊரின் மையத்திலும் ஒரு பெண் தெய்வமே இறைவியாக வணங்கப்படுகிறாள். பல கோடி குடும்பங்களில் வழிபாட்டிற்கு உரியவளாக ஒரு பெண்ணே குலதெய்வமாக இருந்திருக்கிறாள். வற்றாத உயிரோட்டமான நதிகளின் பெயர்கள் முதல் மலைகளின் பெயர்கள் வரை பெண்களின் பெயரையே பார்க்க முடிகிறது. தலைமுறை தலைமுறையாக மனிதன் எனும் உயிரினத்தை உயிரோட்டமாக வைத்திருப்பவளும் பெண் தான். 

நூற்றாண்டுகளாய் புனிதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட அடிமைத்தனங்களையும் பழைமைவாதங்களையும் தூக்கி செல்ல பழக்கவழக்க சட்டங்களை தூக்கிச் சுமந்தவளும் பெண் தான். குழந்தை பருவத்தை மகிழ்வாக கழிக்க வேண்டிய வயதில் இடுப்பில் இரு பிள்ளைகளோடு நின்றிருந்த என் பாட்டியையும் அம்மாவையும் நினைவு கூர்கிறேன். தமிழர்கள் போற்றி வணங்கிய மூத்த தேவியான தவ்வை மூதேவி ஆனது எப்படி? பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்ததால் தந்தை பெரியார், முன்னாள் தமிழ்நாட்டு முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு  திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் நவீன காலத்திலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளை அறிந்து  கல்வி தான் பிரதானம் அவற்றை கற்பதற்கும், கற்ற பின் வேலைக்கு செல்வதற்கும் உள்ள தடைகளை களைய திட்டங்களை தந்திருக்கிறார். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி பெண்களும் ஓதுவார்களாக, அர்ச்சகர்களாக ஆக முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.

மாதவிடாய், கற்பு, புனிதம், இதை செய்யலாம் என்று நூறு இருந்தாலும் இதை செய்யக் கூடாது என்று ஆயிரம் உள்ளது. புனிதம் எது தீட்டு எது என்று பல நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாக பெண்களே ஆணாதிக்க  அடிமைத்தனத்தை ஏற்று கணவனே கண் கண்ட தெய்வம், புல்லானாலும் புருஷன் - புஃல்லானும் புருஷன் என தனக்கு விருப்பமே இல்லாத வாழ்க்கையை ஏற்று யார் யாருக்காகவோ தனது சிறகுகளை உடைத்தெறிந்து பெண் தியாகத்திற்குரியவள், இதனை செய்தால் தான் நீ போற்றுதலுக்குரியவளாவாய் என்ற கற்பிதங்களோடே வளர்ந்து வாழ பழக்கப்படுத்தப்படுகிறாள். 

குலம், சாதி, மதம், என கௌரவத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட மூடநம்பிக்கைகளையும், அடையாளங்களையும், ஒடுக்குமுறைகளையும் பற்றி ஏன் என்று கேள்வி கேட்பதற்கு பெண்கள் தயாராகும் போது தான் அவளுக்கான விடியல் பிறக்கும். அயலி வெப்சீரியஸை ஒவ்வொரும் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்க வேண்டும். தனது தாயின் திருமண வயதையும் பேரு காலத்தின் போது அவள் அடைந்த வேதனைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.  அன்று 3, 5, 8,ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த பெண்கள் படிப்படியாக திராவிடம் செய்த பெண் கல்வி புரட்சியினால் பல்வேறு படிநிலைகளை தாண்டி உயர்கல்வி பயில்கிறார்கள். இருந்த போதிலும் சமூகத்தில் அவள் அனுபவிக்கும் வலிகளுக்கும் வேதனைகளைக்கும் அளவே இல்லை. வீட்டிலும் வேலை செய்து வெளியிலும் வேலை செய்து களைப்பாய் வந்தாலும் ஓய்வென்பதே இல்லை என்கிற அளவிற்கு தனது உழைப்பால் தினந்தோறும் போராளியாய் போராடிக் கொண்டே இருக்கிறாள். 

நீயும் அயலி!
நானும் அயலி!
கட்டுக்கதைகளுக்குள்ளும் கட்டமைக்கப்பட்ட போலி புனிதங்களுக்குள்ளும், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றுள் புதைந்த நம் அடையாளங்களையும் சுயமரியாதையும் மீட்டெடுப்பது ஒவ்வாரு அயலியின் கடமையாகும். பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி - அண்ணல் அம்பெத்கரின் வரிகளுக்கு ஏற்ப இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சி இந்திய பெண்களிடமே உள்ளது.

Tr Gayathri Srikanth | 29.01.2023


கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்தை படித்தேன் அருமையாக எழுதி உள்ளீர்கள் அயிலி கிழவியின் தியாகம், படித்தால் முன்னேறி விடுவார்கள் என்ற பணக்காரர்களின் ஆளுமை, போன்ற அநீதிகளை எடுத்துரைத்த அயலி என்ற தமிழ்செல்வியின் தியாகம் மிகவும் அழகான எழுத்து நடையில்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல ஒரு சிறந்த ஆக்கபூர்வமான விமர்சனம்... திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் குறித்த பதிவாக உள்ளது. மகிழ்ச்சி நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!