பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடா இந்தியா?
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்... என்ற செய்தியை ஏற்கமுடியவில்லையா.... பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா???
பெண் எந்த மதத்தை பெண் எந்த ஊரை சேர்ந்திருந்தாலும், பெண் எந்த சாதியை சேர்ந்திருந்தாலும், பெண் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும், பாலியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, உளவியல்ரீதியாக, சமூகரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகிலுள்ள அனைத்து பெண்களுமே ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவராலாவது பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இது ஒரே நாளில் சரி செய்ய முடியாத ஒன்று.
யாரையும் சாடி யாரையும் குறை சொல்லி ஒன்றும் நிகழப்போவது கிடையாது. இது ஒரு தொடர் கதை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியவர்கள் கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும்.... பெண் பற்றிய புரிதல், சமூக பாலின வேறுபாடு, சமூகத்தின் பார்வையை மாற்றி அமைக்க வேண்டியது நமது கடமையும் கூட.... பெண் அல்லது ஆண் இருவரும் சேர்ந்ததே சமூகம். இந்த சமூகப்பிணைப்பை இளம் தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டிய அவசியமும் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது....
பாலியல் குற்றங்கள் இரு வகையானது. ஒன்று கலாச்சார ரீதியாக பெண்கள் மேல் திணிக்கப்படும் அடக்குமுறையின் தாக்கத்தாலும், ஆண் ஆதிக்க சமூகத்தின் தாக்கத்தாலும் விளையும் குற்றங்கள்; மற்றொன்று கட்டுப்படுத்த முடியாத காம உணர்ச்சியினால் ஏற்படும் குற்றங்கள். பெரும்பாலும் பாலியல் குற்றங்கள் முதல் வகை சார்ந்ததாகவே இருப்பது இச்சமுகத்தின் ஆண் ஆதிக்கத்தனத்தை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது .
இந்தியாவில் பாலியல் குற்றங்கள் நடக்கவே இல்லையா? அல்லது பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளனவா என்றால் இல்லை என்பது தான் பதில். மரண தண்டைனையால் குற்ற எண்ணிக்கையைக் குறைத்து விட முடியாது.
கலாசார, பொருளாதார ரீதியிலான அடக்குமுறையினாலும், மத, சாதிய அடக்குமுறையினாலும் பதியப்படாத பாலியல் குற்ற வழக்குகள் எண்ணில் அடங்கா. பதியப்பட்ட வழக்குகளிலும் பதவி, பணம், அந்தஸ்த்து, சாதி, மதம் போன்ற காரணங்களினால் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க வைக்கப்படுகின்றனர்.
குற்றங்களைக் குறைக்க இச்சட்டங்களில் எந்த விதமான வசதிகளும் இல்லை. தண்டனைச் சட்டங்கள் ஒரு செயலை குற்றமென்று கூறி, அக்குற்றத்திற்கான தண்டனை மட்டுமே வழங்குகிறதே தவிர, அக்குற்றங்களைக் குறைக்க எந்த ஒரு திட்டத்தையும், செயலாக்கத்தையும் வழங்குவதில்லை. சிறப்புச் சட்டங்களின் மூலம் நியமிக்கப்படும் ஆணையங்கள் வெறும் பெயர் அளவிலேயே உள்ளனவே தவிர செயல் வடிவிலில்லை.
பெண்களின் உடை, பெண்களின் நடத்தை என்று சில ஆண்கள் தங்கள் வக்கிர புத்தியை மறைத்துக்கொள்ள பிதற்றாமல், உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான தீர்வினைத் தருவதே பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வழியாகுமே தவிர, மரண தண்டனையோ ரசாயனம் மூலம் ஆண்மை நீக்குதலோ இதற்கான தீர்வாய் நிச்சயமாக அமையாது.
கருத்துகள்
கருத்துரையிடுக