உயிர்பலி வாங்கும் புதுச்சேரியின் தரமற்ற சாலைகள்!

தரமற்ற சாலையால் பெண் சாலை விபத்தில் மரணம்! புதுச்சேரி அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்! இறைவி வலியுறுத்தல்!

கடந்த ஆறு ஆண்டுகளில், புதுச்சேரியில் சாலை விபத்துக்களில் மட்டும் 1,044 பேர் மரணித்துள்ளனர், 7,164 பேர் காயமடைந்துள்ளனர் என்று ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதிக்கு RTI மூலம் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் தினமும் சராசரியாக நான்கு பேர் காயமடைவதையும், மாதந்தோறும் சுமார் 15 பேர் இறந்து போவதை இந்த தகவல் குறிப்பு காட்டுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 3.6.2022 காலை ரெட்டியார்பாளையத்தில் நடந்த விபத்தில், 43 வயதான, முத்தி ரயார் பாளையத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் ராஜவள்ளி என்பவர் தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தனியார் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்துக்கான உண்மை காரணம் என்ன? 

கடந்த 5 ஆண்டுகளாக வரலாறு காணாத மழை புயல் வெள்ளம் ஆகியவற்றை புதுச்சேரி எதிர்கொண்டிருக்கிறது. புதுச்சேரிக்கு பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் சரி செய்ய போதிய நிதி ஆதாரத்தை ஒன்றிய அரசு தற்போது வரை வழங்கவில்லை. இதனால் முறையாக சாலைகளை செப்பனிட படவில்லை. இருளில் மூழ்கிய தெருக்களிலும் குண்டும் குழியுமான சாலைகளும் தொடர்ந்து மக்கள் பல்வேறு விபத்துகளை சந்தித்து வருகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் காட்சிகள் மாறி இருந்தாலும் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. 

புதிய சாலைகள் போடப்பட்டிருந்த போதும், அவசரகதியில் சாலைகள் போடப்பட்ட காரணத்தாலும், பழைய சாலையின் மீது புதிய சாலையை போட்டதாலும், ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் ஒட்டு சாலை, பேட்ச் வொர்க் செய்ததாலும், தரமான சாலையை முக்கிய இடங்களில் புதுச்சேரி அரசு உறுதி செய்யவில்லை. 

ரெட்டியார் பாளையத்தில் ராஜவல்லி இறந்த அந்த இடத்திலும் அரைகுறையாக போடப்பட்ட தார் சாலை மேடும் பள்ளமுமாக இருந்துள்ளது. வண்டியின் சக்கரம் பழைய தார் சாலையின் மீது போடப்பட்ட புதிய தார்சாலையால் எதிர்பாராத விதமாக வண்டியின் சக்கரம் வலது புறமாக திரும்பி உள்ளது. இதனால் அருகே வந்த தனியார் பேருந்து மீது உராய்ந்து சக்கரங்களுக்கு இடையே சிக்கி நிலைகுலைந்து தனது உயிரை இழந்து இருக்கிறார்.

புதுச்சேரி வேலைக்கு செல்லும் பெண்கள் இரு சக்கர வாகனம் பயன்படுத்துவது சவாலாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக தாய்மார்கள் பலர் வாகனங்களில் தங்களது பிள்ளைகளுடன் பள்ளி, டியூஷன், இதர வகுப்புகளுக்கு இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துகிறார்கள். பல விபத்துகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. ஒரு குடும்பத் தலைவி நோய்வாய்ப்பட்டாலோ, உயிரிழந்தாலோ பல்வேறு சமூக கட்டமைப்புகள் காரணமாக அவளோடு சேர்ந்து அக்குடும்பம் சொல்லொணாத்துயரத்திற்கு ஆளாகும். தரமற்ற சாலையால் ஏற்பட்ட இந்த விபத்திற்கு புதுச்சேரி அரசே பொறுப்பேற்க வேண்டும். அக்குடும்பத்திற்கு தேவையான நிவாரணத்தை உடனே அறிவிக்க வேண்டும். 

தீர்வு என்ன?

புதுச்சேரியில் சாலைப் பாதுகாப்புக் குழுவால் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சுமார் 60 இடங்கள் ஆபத்துக்குரிய பகுதிகளாக (கரும்புள்ளிகள்) black spots கண்டறியப்பட்ட இடங்களின் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

அடையாளம் காணப்பட்ட கரும்புள்ளிகளில், பெரும்பாலானவை புதுச்சேரி-கடலூர் சாலையில் (NH45) மரப்பாலம் முதல் கன்னியாகோயில் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு சாலை விபத்து பதிவாகிறது.  விபத்துகளை குறைக்க சாலை நீட்டிப்பு மற்றும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.  இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் வழுதாவூர் ரோட்டிலும் சில கரும்புள்ளிகள் உள்ளன.  பாண்லே பால் பண்ணை வரையில் சாலையோர கடைகள் சாலையை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

 வில்லியனூர்-மூலகுளம் சாலை, நெல்லித்தோப்பு சிக்னல் முதல் இந்திரா காந்தி சிலை வரையிலான சாலையையும் மேம்படுத்த வேண்டும், இந்திய சாலை விதிமுறைகளின்படி முக்கிய சாலைகளில் ஸ்பீட் பிரேக்கர்களை மாற்றியமைக்க வேண்டும்.  கடலூர் சாலை மற்றும் 100 அடி சாலை (இசிஆர் இணைக்கும்) உள்ளிட்ட ஐந்து சாலைகளின் தொடர்புள்ள மரப்பாலம் சந்திப்பின் மேம்பாடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடலூர் சாலையில் ஏஎஃப்டி அருகே உள்ள ரயில்வே கிராசிங்கை விரைந்து மேம்படுத்த வேண்டும்.  இதனிடையே, கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மரப்பாலத்தில் இருந்து கடலூர் சாலைக்கு இணையாக பைபாஸ் சாலை அமைக்க வேண்டும்.

 விபத்துக்கான காரணங்கள் என்ன?

புதுச்சேரியில் விபத்துகள் ஏற்படுவதற்கு போக்குவரத்து விதிகளில் உள்ள குறைபாடுகள், சாலைப் பொறியியல், போக்குவரத்து விதிமீறல்கள், ஆள் பற்றாக்குறை எனப் பல காரணங்கள் உள்ளன.  தரமில்லாத சாலைகளின் மோசமான நிலை, ஸ்பீடு பிரேக்கர் மற்றும் பலகைகள் இல்லாதது, முறையற்ற விளக்குகள், அதிவேகம், எல்இடி லைட்,  குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், டிரிபிள் ரைடிங், சவாரி செய்யும் போது மொபைல் போன் பயன்பாடு, சிறார் ஓட்டுநர்கள் போன்றவை விபத்துக்குக் காரணம்.  இதற்கிடையில், புதுச்சேரியின் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை பிரிப்பான் மற்றும் பிரதிபலிப்பான்கள் இல்லாததால் விபத்துக்கள் ஏற்படுகிறது.  முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள ரவுண்டானாக்கள் மற்றும் சிலைகள் மற்றும் சாலையோரங்களில் பெரிய பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக வைப்பது, போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாதது, ஆளில்லா போக்குவரத்து சந்திப்புகள், பேருந்துகள் மற்றும் லாரிகளை சட்டவிரோதமாக சாலையோரம் நிறுத்துவது ஆகியவை சிக்கலை மேலும் கூட்டியுள்ளன.  இ-வாகன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலையோரங்களில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும். தனியார் பேருந்துகளின் கட்டுப்பாடான வேகத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்கிடையில், புதிய சிக்னல்களை அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள சிக்னல்களை பழுதுபார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் வரவிருக்கும் பட்ஜெட்டில் அரசாங்கத்திடமிருந்து நிதி ஒதுக்க வேண்டும். போதிய ஆட்கள் இல்லாததால் போக்குவரத்து போலீசார் தினந்தோறும் திணறுகின்றனர். இதனால் பல நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மெதுவான ஆட்சேர்ப்பும் உதவாது, புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 390 கான்ஸ்டபிள்கள் பயிற்சியை முடித்தவுடன், சிலர் பணியமர்த்தப்படுவார்கள், ஆனால் அவர்கள் பணியில் சேர ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கும். 
 
கட்டுப்பாடற்று இயங்கும் சுற்றுலா பயணிகளுக்கான வாடகை இரு சக்கர வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். ரேடார் ஸ்பீட் கன்கள் இருந்தாலும், இன்டர்செப்டர் வாகனங்கள் இல்லாததால், காவலர்களால் அதிக வேகத்தில் செயல்பட முடியவில்லை.  போக்குவரத்து நிர்வாகத்தில் தொழில்நுட்பம் அத்தியாவசியமான ஒன்று. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒரு நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளதை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Tr Gayathri srikanth

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!