சங்கம் முக்கியமா சோறு முக்கியமா?

சங்கம் முக்கியமா சோறு முக்கியமா?

செங்கல்பட்டு ஸ்கூல்னு சொன்னா பொம்பள பிள்ளைங்களா இருந்தா புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளின்னும் பயபுள்ளைகளா இருந்தா புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளின்னும் சுத்து வட்டார கிராமங்களிலும் நகரத்திலும் ரொம்ப பேமஸ். குறைஞ்ச பீஸ்ல ஆங்கில வழிக்கல்வியும் தமிழ்வழிக் கல்வியும் சமத்துவ உணர்வோடு கெடுபிடிகளுடன் கல்வி கற்க வாய்ப்பா கிடைச்ச பள்ளிகள் இவை.

2003ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று காமர்ஸ் குரூப் எடுத்தோம். வகுப்பில் மொத்தம் 25 பேர். இதில் 15 பேர் பத்தாம் வகுப்பு வரை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலே கல்வி கற்றவர்கள். சூசையப்பர் பள்ளியிலிருந்து ஒரு 4 பேரும் மற்ற சில ஊர் பள்ளிகளில் இருந்து 6 பேரும் +1 வகுப்பு காமர்ஸ் க்ரூப் எடுத்து ஒன்றாக சேர்ந்திருந்தோம். 

2000க்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகள் படிக்கிற ஸ்கூல். இன்டர்காம் வசதி, சத்துணவுத்திட்டம் உண்டு, பெரிய விளையாட்டு மைதானம் உண்டு. கூடைபந்து கைப்பந்து என அடிக்கடி காலை அசெம்பளியின் போது கூப்பிட்டு பாராட்டு உபசாரங்கள் அடிக்கடி நடக்கும். முக்கியமான விழாக்களின் போது திருப்பலிகள் நடக்கும். நாங்களும் ஜாலியா ஏசு பாட்டு பாடி சமாதானம் சமாதானம்னு சொல்லி சிரிச்சுக்குவோம். 

நாங்க +1ல சேரும் போது தான் பள்ளி தலைமையாசிரியராக சிஸ்டர் நிர்மலா அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்கள். எங்க வகுப்பறை சரியாக இவருடைய அலுவலகத்திற்கு மேலே முதல் தளத்திலிருந்தது. எங்க வகுப்பு இடது புறம் உயிரியல் ஆய்வுக்கூடமும் வலதுபுறம் கம்ப்யூட்டர் லேப்பும் இருந்துச்சி. கம்ப்யூட்டர் லேப்பை பாதியாக கண்ணாடி சேனல் ஒர்க் பண்ணி முக்கால் பாகம் லேப்பும் கால் பாகம் எங்க வகுப்பறையாகவும் இருந்துச்சி. ஒரு க்ளாஸ் முடிஞ்சி மிஸ் வெளிய போனதும் கசமுசா பேசி அரட்டை ஆரம்பிக்கும் போது டங் டொங் டொய்ன்னு இன்டர்காம் ஸ்கூல் முழுசும் ஒலிக்கும். "11C பிஹேவ் ப்ராபர்லி, ப்ளீஸ் கீப் கொயட்"னு சொன்னதும் எங்க க்ளாஸ் மிஸ் பதறி போய் ஓடியாந்து ஏன் இப்படி மானத்தை வாங்குறீங்கன்னு கதறுவாய்ங்க. நாங்க சாரி மிஸ் அப்படின்னு சொல்லி நிலைமையை சமாளிப்போம். 

25 பேரும் ஒத்துமையா இருந்தோம். இந்த 25 பேருக்குள்ளையே குட்டி குட்டி கேங் உருவாச்சி. அதுல கொஞ்சம் பெரிய கேங் நம்ம கேங் தான். வகுப்புவாரியாக அனைத்து க்ளாஸ்களுக்கும் நடனப்போட்டி வந்துச்சி. அதுல நம்ம கேங் மெலடி, பெப்பி, போஃக்னு எல்லா வெரைட்டியும் சேர்த்து மசாலா மிக்ஸ் பாட்டு போட்டு ஒட்டு மொத்த ஸ்கூலையும் எங்க பக்கம் திரும்பி பார்க்க வெச்சாங்க. தாஹிரா, மஞ்சுளா, சசி ரேகா, அர்ச்சனா, ரதிபிரியா, சரண்யா, சுனத்ரா, சுஜீத்தா, நர்மதான்னு எங்க கேங்குக்கு ரசிகைகள் கூட்டத்தை தன் வசம் ஈர்த்தார்கள். 

 Pt க்ளாஸ் அப்போ ஓடிப்பிடிச்சி விளையாட்றது, கைப்பந்து (throw ball)னு செம சுவாரஸ்யமாக ஒவ்வொரு நிமிடத்தையும் மாற்றி வைத்திருந்தோம். எங்களுக்கு பொருளாதாரம் எடுத்த மைதிலி மிஸ் ரொம்ப கராரான டீச்சர். க்ளாஸ் டெஸ்களும் தேர்வுகளின் மார்க்கோடு சேர்த்து கணக்கிடுவாய்ங்க. ஒழுங்கா க்ளாஸ் டெஸ்ட் எழுதலன்னா -2 முதல் -5 வரை கூட ஆகும். இதுவே நல்லா படிச்சி டெஸ்ட் எழுதினா +2 கிடைக்கும். பாராபட்சமே பார்க்கமாட்டாங்க. அதுனால எல்லாருமே போட்டி போட்டு படிச்சோம். 

எம்ஜிஎம்க்கும் மகாபலிபுரத்துக்கும் ஒரு நாள் டூர் போனோம். அப்ப தான் காதல் காெண்டேன், காக்க காக்க, லேசா லேசா, ரன் படம் வெளியான ஆண்டு. கிசு கிசுக்கள், பாட்டுக்கு பாட்டுனு என்டர்டெய்ன்மெண்ட்டுக்கு குறைவில்லாம போச்சி. சூசையப்பர் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் எங்க பள்ளி வெற்றி பெறுவதற்கு எங்க கேங் தோழிகளின் பங்கு முக்கியமாக இருந்ததால் தலைமை ஆசிரியரின் மனதில் நீங்காத இடம் பிடித்தோம். பள்ளி மாணவியர் தேர்தல் நடந்த போது எங்க கேங்ல இருந்து சசிரேகா பள்ளியின் மாணவியர் துணை தலைவியாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரே மாஸ் தான் போங்க. அனைவரும் தேர்ச்சி பெற்று +2 போனோம். எங்க என்டெர்டெய்ன்ட்க்கு பெரிய ஆப்பு காத்து கொண்டிருந்தது. இப்ப எங்கள் வகுப்பு இரண்டாம் தளத்தில் அமைந்திருந்தது. மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் எங்கள் ஆபீஸ் ரூமாக மாறிப்போனது.

படிப்பு, படிப்புன்னே ஓடிட்டு இருந்துச்சி.  சனிக்கிழமைகளில் எல்லாருக்கும் அரை நாள். ஆனால் +2விற்கு மட்டும் முழு நாள் இருக்கும். மாதம் இருமுறை தமிழ் ஸ்பெஷல் க்ளாஸ் மதியத்தில் நடைபெறும் பொதுவாக எல்லா +2 க்ரூப்களுக்கும் தமிழ் பொதுவான பாடம் என்பதால் மூத்த தமிழாசிரியையாக இருந்த ரமணி மிஸ் எல்லா க்ரூப் மாணவர்களையும் பெரிய ஹாலில் ஒன்றாக தரையில் உட்கார வைத்து பாடம் எடுப்பார். வழக்கம் போல எங்க கேங் கடைசி வரிசையை ஆக்கரமித்துக் கொண்டிருந்தது. லேஸ் பேக்கட், கமர்கட், தேன் மிட்டாய்னு சைட்ல ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம்.  இப்படியே சில வாரம் ஓடுச்சி.

ஒரு நாள் எல்லாரும் காசு போட்டு ஃபுல் மீல்ஸ் சாப்பிடுவோம்னு திட்டம் போட்டோம். பதினோராம் வகுப்பிற்கும் எங்களுக்கும் ஒரே யூனிபார்ம் தான். அதனால் அந்த மாணவிகள் அரை நாள் பள்ளி முடிஞ்சி வெளிய போகும் போதும் அவங்ககூடவே சேர்ந்து இரவல் சைக்கிளில் ஹோட்டலுக்கு போய் சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுப்பது என் வேலை. இதை எங்க வெச்சி சாப்பிட்றதுன்னு ஒரே கன்பியூஷன். இறுதியாக நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் மொட்டை மாடி. இது வரை எந்த மாணவியும் ஆசிரியையும் புழங்காத இடமாக இருந்தது. படிக்கட்டுகள் அருகிலேயே கொஞ்ச மரம் நிழல் இருந்தது. 10 பேர் சாப்பிட 5 சாப்பாடு வாங்கிட்டு வருவேன். எல்லாரும் ஒரே நேரத்தில் அனைத்து சாப்பாட்டையும் பிரிக்கமாட்டோம். முதலில் ஒரு சாப்பாட்டை பிரித்து அந்த சாதம் முழுவதிலும் காரக்குழம்பிலிருந்து துவங்கவோம். ஆளுக்கு சில உருண்டைகள் உருட்டி ஊட்டுவோம் சாப்பிடுவோம். அடுத்தது சாம்பார் சோறு, பிறகு ரசம் மோர்னு இறுதியில் பாயாசத்துடன் விருந்து நிறைவுரும். 

இந்த விருந்து பல வாரங்கள் தொடர்ந்தன. இந்த சோத்துக்கு வாரம் முழுவதும் பத்து இருபதுன்னு பணம் சேர்த்து வெய்போம். சில வாரம் பிரியாணியும் உண்டு. சாப்பிட்டு முடித்தபின் இலைகளையும் குப்பைகளையும் ஒன்றாக மூட்டைகட்டி மூட்டிகட்டி மூலையில் வைத்தோம். குப்பைகளை வெளியே எடுத்துச் சென்றால் மாட்டிக்குவோம்னு அங்கேயே வைத்தோம். 

இறுதி தேர்வுகள் நெருங்கும் சமயம். மோட்டரில் ஏதோ பழுதுன்னு தலைமை ஆசிரியர் சிஸ்டர் நிர்மலா மொட்டை மாடிக்கு சென்றார். எங்களுக்கா குபீர்ன்னு வேர்த்துடிச்சி. நெஞ்சு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிடுச்சி. அனைவரும் கைகளை பிசைந்து கொண்டு ஒருவர் இன்னொருவர் மூஞ்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். குப்பைகளை சிஸ்டர் பார்த்துவிட்டு கடும் கோபத்திற்கு ஆளானார். இதுக்கு யார் காரணம்னு விசாரிக்க 12சி தான்னு வாட்ச்மேன் போட்டு கொடுத்துட்டாரு. இந்த செய்தி காட்டுத் தீயாய் அனைத்து ஆசிரியர்களின் காதுகளுக்கும் போனது. 12சி ரௌடி செட்டாக அடையாளப்படுத்தப்பட்டது. சிஸ்டர் எங்களிடம் உங்க மேல எவ்ளோ நம்பிக்கை வெச்சேன். எல்லா டீச்சர் முன்னாடியும் தலை குனிய வெச்சிட்டீங்கன்னு சொன்னாங்க. 25 பேரும் ஆபீஸ் ரூம் எதிரில் லைனா நிக்க வெச்சாங்க. எல்லாருக்கும் டிசி கொடுக்கப்போறாங்கன்னும் பெ்றோர்களை கூப்பிட்டு கண்டிக்கப் போறாங்கன்னும் ரொம்ப பயமா இருந்திச்சி. சிஸ்டரை கெஞ்சினோம். மன்றாடினோம். சுமார் ஒரு மணி நேரம் எங்களை நல்லா கதறவிட்டாங்க. பிறகு மெல்லிய குரலில் அழைத்து இனி இது போன்று எந்த செயலிலும் ஈடுபட கூடாது. நல்லா படிச்சி நல்ல பேர் வாங்குங்கன்னு சொல்லி சிரிச்ச பிறகுதான் எங்களுக்கு மூச்சே வந்துச்சி! இலை சோறை பார்த்தால் இன்றும் எனக்கும் தோழிகளுக்கும் இச்சம்பவம் நினைவில் வந்து போகும். சங்கம் முக்கியமா சோறு முக்கியமா ? 😬

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!