துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் என்ற திருக்குறளுக்கேற்ப மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம். தன் குடிகளை காக்க வேண்டிய அரசாங்கமே குடிக்கச் சொல்லி வீதியெங்கும் மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளதே பெரும்பான்மையான குற்றங்களுக்கு காரணம். 

உலகம் முழுவதும் ஏறத்தாழ மொத்த மக்கள் தொகையில் 3.6 முதல் 6.6 சதவீதம் பேர் வரை போதைப் பழக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். புகையிலை, மது, கஞ்சா, ஹெராயின், எல்.எஸ்.டி. , ஓப்பியம் கலந்த போதைப் பொருட்கள், பிரவுன் சுகர், கூல் லிப் என பல வகையான போதை வஸ்துக்கள் புதுச்சேரியில் கள்ளசந்தையில் புழங்குவதாக கூறப்படுகிறது. சென்ற மாதம் அதிக கல்வி நிறுவனஙகள் இயங்கும் லாஸ்பேட்டை பகுதியில் ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருள், பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

போதைக்கு அடிமையான பலரின் உடல் உறுப்புகள் உருகுலைந்துக் கிடக்கிறது.  இருதயநோய், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட 10 கொடிய நோய்கள் வருவதற்கு போதை பொருட்கள் காரணமாக திகழ்கின்றன. போதை பழக்கத்துக்கு அடிமையான இளவயதினரை அதிக அளவில் பாதித்து வருகிறது.

போதைப் பழக்கத்திற்கு ஆளாகி மீள வழி தெரியாமல் தவிப்போரை அதிலிருந்து மீட்டு புதிய பாதைக்கு மாற்ற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் பற்றிய தீமைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அறிவை அழித்து, உடலை வாட்டி, உயிரைப் பறிக்கும் போதைப் பொருட்கள் இல்லாத புதிய உலகம் படைப்போம். இன்று (ஜூன் 26-ந்தேதி) உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆரோவில் காட்டுப் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் சிலர், மதுபோதையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர், கல்லூரி மாணவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோரை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி முக்கியமான, 15 பேரை கைது செய்தனர். மேலும் அவ்விடத்தில் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கஞ்சா, மது வகைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆரோவில் பகுதியில் கஞ்சா மற்றும் மது போதை கொண்டாட்டங்கள் அதிகரித்துள்ளது அம்பலமாகிறது.

புதுச்சேரி நகரப்பகுதிகளிலும், சில ஒதுக்குபுறமான தங்கும் விடுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டிஸ்கோத் எனப்படும் இசை மற்றும் மதுவுடன் கூடிய நடனங்கள் அனுமதியின்றி நடைபெற்று வருகிறது.இதில் கலந்து கொள்ள சென்னை, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் படையெடுக்கின்றனர்.இதனை உள்ளுர் போலீசார் மாமூல் வாங்கிக்கொண்டு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவை அனைத்தையும் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசும் காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருளுக்கு அடிமையாகி அதனை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர். சாராயம் மற்றும் போதை பொருட்களை உட்கொள்வதால் போதை மயக்கத்தில் அவர்களுடைய விழிப்புணர்வை தொலைப்பது மட்டுமன்றி உடல் நலத்தை கெடுத்து பல சமூக விரோத செயல்களிலும் ஈடுபட வைத்து அவர்களை அழித்து விடுகிறது. போதை பழக்கத்தால் இன்றைய இளைஞர்கள் சீரழிந்து கொண்டே செல்கின்றனர்.

இதனை புதுச்சேரி அரசு கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. ஆற்றல் வாயந்த திறமைமிக்க மாணவர்கள் தவறான வழிகாட்டுதல்களால் இளம்வயதிலேயே போதைக்கு அடிமையாவதால் அவர்களுடைய உற்பத்திறன் குறைந்து பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கிறார்கள்.

புதுச்சேரி பள்ளிகளின் உள்ளேயும் கஞ்சா விற்பனை அதிகரித்திருக்கிறது என்ற செய்தியும் மிகுந்த அச்சத்தை தருகிறது. மாணவர்களும் இளைஞர்களும் போதை பழக்கத்திலிருந்து வெளியேற தரமான ஆற்றுபடுத்தும் மறுவாழ்வு (Counselling & Rehabilitation) நிலையங்கள் இல்லை.18 வயதிற்குட்பட்டவர்களுக்கு சிகரெட், மது, போதை, கஞ்சா பொருட்கள் விற்க தடை இருந்தும் புதுவையில் தங்குதடையின்றி விற்கப்படுகிறது. 

இந்த சவாலான சூழ்நிலைகளில் புதுச்சேரி அரசு திறம்பட செயல்பட வேண்டும். போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மது விற்பனையை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்படாமல் வருவாயை பெருக்கும் வழிகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

போலிஸார் அதீத கவனத்துடனும் பொருப்புடனும் நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம், ஏன் என்றால் போதைக்கு அடிமையானவர்கள் வாழும் அதே சமூகத்தில் தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டயுள்ளது. சட்டத்திற்கு புறம்பான மது விற்பனை, போதை பொருட்கள் விற்பனை குறித்து போலிஸாருக்கு ரகசிய தகவல் கொடுக்க தயங்க கூடாது. ரகசிய தகவல் அளிக்கும் நபரின் அடையாளங்களை காவல் துறையினர் பாதுகாக்க வேண்டும்.

Tr Gayathri Srikanth

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!