அழிவின் விளிம்பில் இருந்து மீளுமா தேங்காய்திட்டு ?



புகழ்மிக்க சுற்றுலா நகரமான புதுச்சேரியின் மைய பகுதியில் அமைந்துள்ளது தேங்காய்திட்டு துறைமுகம். துறைமுகச் சாலை துவங்கியதுமே நம்மை மாங்குரூவ் மரங்கள் வரவேற்கும். இந்தியாவிலேயே மொத்தம் 12 இடங்களில் மட்டுமே சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இதில் நம் புதுச்சேரி மாநிலமும் ஒன்று. இந்த பெருமைக்குரிய மாங்குரூவ் காடுகள் சதுப்பு நிலங்களில் மட்டுமே செழித்து வளரக்கூடியவை. ஆனால் அவை புதுச்சேரி நகரத்தின் வளர்ச்சியாலும், சுகாதாரமின்மையாலும் தேங்காய்திட்டு பகுதி மாசடைந்து வருகிறது. மீன் பிடிப்பு மேய்ச்சல் மற்றும் மண்ணை அப்புறப்படுத்துதல் போன்றவையாலும் இப்பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநிலம், தேங்காய்திட்டு துறைமுகம் செல்லும் சந்திப்பில் உள்ள சதுப்பு நிலக்காடுகளை மாசுபடுத்தும் வகையில் புதுச்சேரி நகரப் பகுதிகளில் இருந்து குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள், ப்ளாஸ்டிக் கழிவுகள், மக்காத கட்டிடக் கழிவுகள், மீன்பிடிக்கும் உபகரணக் கழிவுகள், மீன் கழிவுகள், வீட்டுக் கழிவுகள், குடோன் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் என அனைத்தையும் கொண்டு வந்து மாங்குரூவ் மரங்கள் அருகே கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். மேலும் பழைய டயர், ஒயர் என கம்பிகளை எடுப்பதற்காக ப்ளாஸ்டிக் கழிவுகளை மாங்கரூவ் மரங்களுக்கு அருகிலேயே எரித்துவிடுகின்றனர். இதனால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. சாலையை மறித்து மீன் விற்பனை செய்யப்ப்டுகிறது.

சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இது காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும், மது பாட்டில்கள் உடைந்த நிலையிலும் உடையாத நிலையிலும் காட்சியளிக்கிறது. இதனால் சதுப்பு நிலத்தில் உயிர் வாழும் பல உயிரனங்கள் அழியும் விளிம்பின் நிலையில் உள்ளது. அங்கு வரும் பறவைகளும் சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுகின்றன. உள்ளூர் வாசிகள் சதுப்பு நிலத்தில் உள்ள புழுக்களை திருடி, இறால் பண்ணைகளுக்கும், இயற்கை எருவிற்கும் அவற்றை விற்றுவிடுகின்றனர். இதனால் பல்லுயிர் பெருக்கத்திற்கு வழியில்லாமல், உணவுச்சங்கிலியில் ஒரு உயிர் அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் நகரத்தின் ஒட்டு மொத்த கழிவு நீரும் கலக்கும் இடமாகவும் தேங்காய்திட்டு பழைய துறைமுகம் விளங்குகிறது. கழிவு நீரில் ப்ளாஸ்டிக் குப்பைகள் அடித்து வரப்படுவதால், மாங்குரூவ் மரங்களின் வேர்களில் இது பின்னிப் பிணைந்து மக்காமல் அவை கேடு விளைவிக்கின்றன. மாசடைதல், குப்பைகளை போடுதல் மற்றும் கழிவு நீர் கலத்தல், அத்துமீறி திட்டமிப்படாத குடியிருப்புக்களை அமைத்தல், கடல்நீர் ஊடுருவுதல், அந்நிய நுண்ணுயிர்கள் மற்றும் அதிகரிக்கும் குடியிருப்புக்கள், தேங்காய்திட்டு போன்ற சதுப்பு நிலங்கள் பாதிப்படைய காரணமாயிருப்பதுடன் அதுவே மனித சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவதாகவும் அமைகிறது. இப்பாதிப்புக்களும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றம் தீவிரமடைய காரணமாயிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயற்க்கை பயனுள்ள மரங்களை பற்றி அறியாமல் அதனை சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்டங்களை கொண்டு தண்டிக்க வேண்டும். அங்கே குப்பை கொட்டுவதை தவிர்க்க கடுமையான அபராதங்களை விதிக்க வேண்டும். 

சதுப்புநிலம் (Marshy) என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும், நீர் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியாகும்.சுனாமி போன்ற பேரலைகளிலிருந்து கடற்கரைப் பகுதிகளையும், கடற்கரை கட்டுமானங்களையும் காக்கக்கூடிய தன்மை சதுப்பு நில அலையாத்தித் தாவரங்கள் உண்டு. . மாங்கரூவ் காடுகள் எனப்படும் சதுப்பு நில காடுகள் சிறு கடல் மீன்கள் வளர, மீன்களுக்கு டே கேர் போல இருக்கின்றன. 2004ல் சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்பு நிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும், இடம் சார் காலநிலை, நுண் காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதி செய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன. உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகியுள்ளன.  சதுப்பு நிலங்கள், உவர்ப்புத் தன்மை கூடிய சதுப்பு நிலங்கள் என்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளது. ஒன்று சதுப்பு நிலங்களில் வளரும், மற்றொன்று கூட்டமாக வளரும் சிறு தாவரங்களை அலையாத்தித் தாவரங்கள் என்பர். அலையாத்தி தாவரங்கள், சுனாமி போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது.

தேங்காய்திட்டு பகுதியில் நத்தைகள், சேற்று நண்டு, கடல் நண்டு, கடலேரி நண்டு, ஒற்றைக் கவ்வி நண்டு, சிங்கி இறால், பால் இறால், கண்டற்சிப்பி, ரெலஸ் கோபியம் சிப்பி, லிற்றோரிச் சிப்பி, கண்டல் நீலச் சிப்பி, ஊரி, நீர்ப்பல்லி. கண்டற்கொக்கு, வெண்கொக்கு, கடற்புள், ஆக்காட்டிக் குருவி, மீனினங்கள், பாலூட்டிகள், ஈரூடக வாழிகள், ஊர்வன போன்ற உயிரினங்களும், பறவைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 

சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் அதிக நீர்வீழ்ச்சியின் போது பெறப்படும் நீரை உள்வாங்கி வௌ்ளம் வராமல் தடுக்கிறது. வௌ்ளத்தடுப்பைத் தவிர மேலும் பல முக்கியமான பல நன்மைகள் சதுப்பு நிலத்தில் கிடைக்கின்றன. வடிகாலமைப்பு அல்லது வீட்டுப்பாவனைக்கான கிணறுகளுக்கு நன்னீரை வழங்கல், அழகிய மற்றும் மருத்துவ தாவரங்களை வளர்த்தல், உள்ளக காற்றின் வெப்பநிலையை கட்டுப்படுத்துதல், பூச்சிகளை கட்டுப்படுத்தல், வீட்டுத்தோட்டங்களின் மகரந்த சேர்க்கைக்கு துணை புரிகிறது. தேங்காய்திட்டு பகுதியில் தொடரும் பல்வேறு இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாக அதன் தரத்தை இழக்கிறது. இவ்வாறு சதுப்பு நிலங்கள் தரமிழப்பதால் அவற்றில் இருந்து கிடைக்கும் நன்மைகளும் படிப்படியாக குறைந்து வருகிறது.

மண்ணில் காற்று குன்றும் போது அதற்கு ஈடு செய்யும் வண்ணம் தாவரங்களும் புதுச்சேரி சதுப்புநிலக் காடுகளில் உள்ளன. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் தேங்காய்திட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து சமூக இயற்க்கை ஆர்வலர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கிறார்கள். இது குறித்து பல மனுக்கள் புதுச்சேரி வனத்துறை மற்றும் கிரண்பேடிக்கு கொடுத்த போதும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆகவே, சதுப்பு நிலங்களை பாதுகாத்து, நமது எதிர்காலத்தினை வளமுள்ளதாக மாற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Tr Gayathri Srikanth

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!