தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர்
"வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோன் உயரும்" என்று ஓர் அரசாட்சியில் நீர் மேலாண்மையின் அவசியத்தை உணர்த்தும் விதமாக விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக எடுத்துரைக்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் புதுச்சேரி பெருமைக்குரிய இடம் பெற்றிருந்தாலும், வாழத்தகுதியற்ற இடமாக புதுச்சேரி மாறும் அவல நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆச்சரியமாக உள்ளதா? ஆம். வாழ தகுதியற்ற இடமாக புதுச்சேரி மாற வாய்ப்புள்ளது.
புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதுவையின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்காமல் இருக்க பாதாள சாக்கடைத்திட்டம் அமல் செய்யப்பட்டு நேரடியாக கால்வாய் நீருடன் மழை நீரும் உருண்டோடி கடலில் நேரடியாக குப்பைகளோடு சென்று சேர்ந்துவிடுகிறது.
புதுச்சேரியை மதுச்சேரி என்று கூப்பிட்டாலும் புதுவையில் அனைத்து மக்களும் வெளிமாநில மக்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் விஷயம் என்னவென்றால் மூன்று வேளையும் குடிநீர் வீட்டுக்கே வரும் என்பதை தான். அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு வீட்டில் குறைந்தது 5 அல்லது 10 குடங்களோ, ஒரு பெரிய அண்டாவோ இருக்கும். வாரத்திற்கு இரண்டு முறையோ ஒரு முறையோ தான் குடிநீர். தேவையான நீரை பிடித்து வைத்துக் கொண்டு தான் ஆள முடியும். ஆனால் புதுவையில் பெரும்பான்மையான வீடுகளில் தண்ணீர் பிடித்து வைக்கும் வேலையில்லை. காரணம், மூன்று வேளையும் குறித்த நேரத்தில் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைத்துவிடுகிறது.
புதுவையின் நகரப்பகுதிகளில் உள்ள வீடுகளில் 90% கிணறு வசதியோ, போர் வசதியோ கிடையாது. கிணறுள்ள வீட்டை காண்பது மிகவும் அரிது. மழை நீர் சேகரிப்பு செய்யப்படாத வீடுகளும் வீதிகளும் நிறைந்துள்ள புதுச்சேரி குடியிருப்புப் பகுதிகள் தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள், போதிய மரங்கள் இல்லாதது போன்ற காரணிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் ஆண்டுகளில் வரண்டு போக வாய்ப்புகள் அதிகம்.
புதுச்சேரியின் முக்கிய ஏரியான ஊசுட்டேரி ஏரியும் 38 ஆண்டுகளுக்கு பின் வரண்ட பாலைவனமாக காட்சியளிக்கிறது. புதுச்சேரியின் முக்கிய நீராதாரமான ஊசுட்டேரி ஏரி பல ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்தாலும் 38 ஆண்டுகளுக்கு பின் வரண்டு போய் சின்ன குளத்தைப்போல காட்சியளிக்கிறது.
மூன்று வேளை குடிநீரையும் வீட்டுக்குள் தந்து 5 கிமீ சுற்று வட்டாரத்திற்கு 7 ரூபாயில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் தந்த அரசாங்கம், அதிகப்படியான மழையின் போது தண்ணீ்ர் சேமிப்பை வலியுறுத்தாமல் மெத்தனமாக செயல்பட்டதன் விளைவாக கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கவிருக்கிறது புதுச்சேரி மாநிலம். வீட்டுக்கு இலவச மிக்ஸி கிரைண்டர் கொடுத்த ரங்கசாமி அரசு, இலவசமாக வீட்டுக்கு ஒரு சூரிய மின்சார விளக்கை கொடுத்திருக்கலாம். மழை நீர் சேகரிப்பை கட்டாயம் தன் வீடுகளில் அமல்படுத்தினால் மட்டுமே அரசின் நலத்திட்டங்களை பெற முடியும் என்றும், வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என்றும் கெடுபிடிகளை கொடுத்திருந்தால் அரசாங்கத்தை உலகமே பாராட்டியிருக்கும். கட்டாய ஹெல்மெட் என்ற அறிவிப்பின் மூலம் மக்களை முட்டாளாக்கியிருக்கிறது.
வாட்டர் ரிச் புதுச்சேரி என்று கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து கால்வாய்களை தூர்வாரும் நடவடிக்கையில் ஈடுபட்ட கவர்னரும் மழை நீரை இலாவகமாக கடலில் சேர்த்த பெருமைக்குரியவர். கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தும் திறனை அதிகரிக்காமல் கேமராவுக்கு மட்டும் போஸ் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார். நீர்ப்பாசன திட்டங்களுக்கு பொருந்தும் வகையில் வேதியியல், நுண்ணுயிரிகள் மற்றும் நுண்ணுயிரிகளை உறிஞ்சுவதற்கு நீர்வாழ் தாவரங்களை ஆலைகளில் வளர்த்தெடுத்து பாசனத்திற்கு பயன்படுத்தும் அறிய திட்டங்களை வாட்டர் ரிச் புதுச்சேரியில் செயல்படுத்த தவறிவிட்டார்.
தானே புயலின் போது மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாததால் மின் மோட்டார் பயன்படுத்தி மேல்நிலை நீர்த்தொட்டிகளில் ஏற்றி பின் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போது தண்ணீர் நிறைந்திருந்தது அனைவருக்கும் கிடைத்தது. ஆனால் தற்போது நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால், தண்ணீர் பிரச்சனை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையான வீடுகளில் போர், கிணறு இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் கான்கிரீட் காடுகளுக்குள் நமக்காே கால்நடைகளுக்கோ தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம்.
மக்கள் தண்ணீர் பயன்படுத்தும் பகுதிகளில் வீதியெங்கும் ஒரு நிலத்தடி போர் அமைக்க வலியுறுத்த வேண்டும். மழைநீரை சேமிக்க கராரான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். கிணறுகள் வைத்திருப்போரை ஊக்குவிக்க வேண்டும். கிணறுகள் தோண்ட மானியம் வழங்குவதை கண்காணித்து நீர்வளத்தை மேம்படுத்த வேண்டும். தண்ணீரை வீணாக்குபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
மனித உடலானது 55% முதல் 78% வரையில் நீரால் ஆனது. இரத்தத்தில் 90% நீர் தான் உள்ளது. ஆண்கள் நாளொன்றுக்குக் குறைந்தது 2 லிட்டர் நீரும், பெண்கள் 2.7 லிட்டர் நீரும் குடிப்பது அவசியமானது. ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ் நேஷனல் ரிஸேர்ச் கவுன்சில்’ 3.7 லிட்டர் நீரைப் பரிந்துரைக்கிறது. ‘ஒரு நாளில் ஒரு மனிதன் குடிக்க, துவைக்க, சமைக்க மற்றும் உடல்நலன் பேண என குறைந்தது 50 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறான்’ என்று ‘ஐக்கிய நாடுகள் சபை’ குறிக்கிறது.
தண்ணீர் வியாபாரமாக்கப்பட்டுவிட்டது; தண்ணீர் அரசியலாக்கப்பட்டு விட்டது; இவையாவும் அதன் உண்மைத் தன்மையை மறைத்துவிட்டன. மணல் கொள்ளை, ஆற்றுப்படுகைகள் வறட்சி, நிலத்தடி நீர் குறைவு, நீர்நிலைகள் மாசுபடுதல் போன்ற பல்வேறு மனித சமூகத்தின் சுயநல வேட்கையால் தாகத்தில் தத்தளிக்காமல் புதுவையை காப்பாற்ற சாதி, மதம், இனம், மொழி, அரசியல் கட்சிகள் என அனைத்திற்கும் அப்பாற்பட்டு மக்களையும் இயற்கை ஆர்வலர்களையும், ஒன்றிணைத்து செயல்பட்டால் நிச்சயம் நாம் தண்ணீர் தேவைக்கு தீர்வு காணலாம். வரப்புயர நீருயர்ந்து நெல்லுயர்ந்து குடியுயர்ந்து கோலுயரந்து கோனும் உயர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
Tr Gayathri Srikanth
கருத்துகள்
கருத்துரையிடுக