காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளதா?


காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளதா?

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் கூட இறுதி சடங்குகள் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரே அப்பெண்ணின் உடலை அவசரகதியில் எரித்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் ராகுலை பிடித்து கீழே தள்ளி அட்டகாசம் செய்தது யோகி தலைமையிலான உத்திரபிரதேச அரசு. அதன்பின் போலீஸார் ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களைக் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டிருந்தாலும் ராகுல் காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸார் 200 பேர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் கவுதம் புத்தாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில், “ உ.பி. அரசும், போலீஸாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடமும், பெண்ணிடமும் நடந்துகொண்ட முறையை என்னாலும், எந்த இந்தியராலும் ஏற்று கொள்ள முடியாது. ஹத்ராஸுக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் வேதனையைப் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.  அவர்களைச் சந்திக்கும் என் முயற்சியை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் தனது ட்விட்டரில் பதிவில், “ உத்தரப் பிரதேச அரசு ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த விஷயங்களில் களங்கப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கவில்லை, அந்தப் பெண்ணின் புகார் உரிய நேரத்தில் பதிவு செய்யப்படவில்லை. அந்தப் பெண் இறந்தபின் உடல் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர், கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இப்போது மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஆளாக்கப்பட உள்ளனர். இதுபோன்ற நடத்தையை தேசத்தில் யாரும் ஏற்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டுவதை நிறுத்துங்கள்’’ என கடுமையாக தன் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். 


இந்திலையில் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தைச் சந்திக்க மீண்டும் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் சென்றபோது அனுமதி அளிக்கப்படவில்லை. எல்லையில் குவிக்கப்பட்டிருந்த காவலர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பிரியங்கா காந்தி தன்னைத் தாக்க வரும் லத்தியை பிடித்தபடி தனது தொண்டர்களை போலீஸிடமிருந்து காத்து நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தடுப்புகளை மீறி பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த பிரியங்கா காந்தியை, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கட்டிப்பிடித்து தேற்றி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியது அனைவரது நெஞ்சிலும் நீங்காத ஒரு வரலாற்று நிகழ்வானது. 

அதிகாரத்தை எதிர்த்து நெஞ்சுரம் நீங்காமல் பாதிக்கப்பட்ட சாமானிய குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல பல்வேறு போராட்டங்களை ராகுலும் பிரியங்காவும் முன்னின்று நடத்தி தாக்குதல்களுக்கு உள்ளானது அனைத்து மக்களையும் திடுக்கிட வைத்தது. ஆனால் ஒரு பேரியக்கத்தின் இரு ஆளுமைகள் தாக்கப்படுவதை பார்த்து பொதுமக்களும் மாற்றக்கட்சியினரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்த போது காங்கிரஸ் கட்சியினர் பெரிய அலட்டல்கள் இல்லாமல் கள்ளமவுனத்துடன் சாதாரணமாக கடந்து போனது சமூக ஊடகங்களிலும் பொது வெளியிலும் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. 

மறைந்த முன்னாள் முதல்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இவர்கள் ஆட்சியில் இல்லாத போது பல்வேறு அரசியல் சூழல்களில் இவர்களுடைய தொண்டர்களே இவர்களுக்கு பக்கபலமாய் இருந்திருக்கிறார்கள். இது போன்ற சமயங்களில் தலைவர்கள் யாரும் முன்னெடுத்து நடத்தாமல் தொண்டர்களே அணி திரண்டு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்வது வழக்கம். ஆனால் தன்னை மீறி எதுவும் நடக்கக்கூடாது என நினைக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கட்டுப்பாடுகளால் காங்கிரஸில் உள்ள இளைஞர் பட்டாளம் உட்கட்சி பூசல்களில் சிக்கித் தவிக்கிறது. காங்கிரஸில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் தரப்படாமல் உட்கட்சி அரசியலே பெரும் பஞ்சாயத்தாய் உள்ளது. 

அனைத்து அடக்குமுறைகளையும் இடதுகையால் டீல் செய்த பிரியங்கா காந்தி புதிய நம்பிக்கை நட்சத்திரமாய் பிரகாசிக்கிறார். பாசிச பாஜகவின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராட பேராற்றல் தேவைப்படுகிறது. சிதறிக்கிடக்கும் தீப்பொறிகள் ஒன்றிணைத்தால் மட்டுமே காரிருள் அகலும். சரியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு காங்கிரஸ் தனது கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி கட்சிக்கு உயிரூட்ட வேண்டியது அவசியமாகிறது. தலைமை யாருன்னே தெரியாமல் எவ்வளவு நாள் கட்சி நடத்துவது? பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி தன் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளார். காங்கிரஸிற்கு புத்துயிரூட்டி பேரியக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை பிரியங்கா காந்தி ஏற்றால் மாற்றம் நிச்சயம் என கட்சியின் தொண்டர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு உள்ளது!

Tr Gayathri Srikanth / Written on Oct 5, 2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!