சிறுபான்மையினரை இழிவு செய்யும் பாசிச மகாராணிகள்!

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். - திருக்குறள்

உயர்ந்த கொள்கையும் உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும். அது போலத்தான் புதுவை மக்களின் கொள்கையும் உறுதியும் என்பதை வலியுறுத்தியது புதுவை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியது. புதுவை கவர்னர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு ஜூன் 2018 இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை கண்டித்து புதுவை மாநில இந்து முன்னணி சார்பில் நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தி கவர்னருக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்துக்களுக்கு தீபாவளி விருந்து, பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் விருந்து வழங்காமல் கவர்னர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டியது அனைவருக்கும் நினைவிருக்கும். கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பியதும் அதனை பொருட்படுத்தாத கிரண்பேடி பரபரப்பான சூழ்நிலையிலும் கவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அவசரகதியில் நடந்து முடிந்தது.

கடந்த 2018 ராஜ்நிவாஸ் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இஸ்லாமியர்கள் 100 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.  அவர்களில் 50-க்கும் குறைவானவர்களே பங்கேற்றனர். மற்றவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்காமல் புறக்கணித்தார்கள்.

கடந்த 2019ல் தவளக்குப்பம் பகுதியில், ரமலான் மாதத்தை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அப்போது புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயம், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் கலந்துகொண்டு இஸ்லாமியர்களோடு சேர்ந்து நோன்பு திறப்பு மேற்கொண்டு விழாவை சிறப்பித்தனர். இஸ்லாமிய பெருமக்களின்  பெருமைக்குரிய தினம் என்றால் ரமலான் தான். ஏழைகளின் பசியை உணர்ந்தவனால் மட்டுமே இன்னொரு ஏழைக்கு உதவமுடியும் என்ற உயரந்த எண்ணத்தை விதைக்கும் திருவிழா.

புனித ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் உயிராக நேசிக்கும் நபிகள் நாயகம் வாயிலாக, சிறப்பு மிக்க இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்கள் கடும் விரதமிருந்து, பசியின் கொடுமையை உணர்ந்து, ஏழை, எளியோரின் பசித் துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்துகின்ற சிறப்பை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இப்தார் என்பது இஸ்லாமியர்கள்  கடுமையான விரதமிருந்து நோன்பை முடித்துக் கொள்பவர்கள் ஒன்றாகக் கூடி உணவை பகிர்ந்து உண்பதாகும்.

ரமலான் மாத நோன்புக் கஞ்சியை பகிர்ந்தளித்து பிறை கண்ட பின் தங்களது பிராத்தனைகளை முடிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் சாதி மதம் பாராமல் அனைவருக்கும் பிரியாணி அளித்து வயிறார உணவு அளிப்பது காலம்காலமாக நிகழும் உன்னத கலாச்சாரம். இப்புனிதமான இப்தார் நோன்பு விழாவினை புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய பொருப்பு வகிக்கும் துணை நிலை ஆளுநர் ராஜ்நிவாஸில் கொண்டாட வேண்டியது மரபு. இது மாநிலத்தின் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஒரு உயரிய செயல்பாடு.

வரலாற்றில் முதன் முறையாக புதுச்சேரியில் இப்தார் நோன்பை அனுசரிக்காமல் சிறுபான்மையினரை அசிங்கப்படுத்தி தனது மதச்சார்பான போக்கை உறுதி செய்துள்ளார் பாஜக ஏஜெண்ட் கிரண்பேடி. அதே பாணியை தற்போது பொறுப்பு து.நி.ஆளுநர் தமிழிசையும் கடைப்பிடிக்கிறார். கடந்த காலத்தில் இப்தார் நோன்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை ராஜ்நிவாஸில் வெளி மாநில மாணவர்களின் உள்ளிருப்பு பயிற்சிக்காக செலவிட்டார் கிரண்பேடி.

ராஜ்நிவாஸில் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழும் ராஜ்நிவாஸ் ராணியாக இருந்த கிரண்பேடிக்கு, பேடியின் சிங் சங் அதிகாரிகளும், தேவநிதிதாஸும் கிரண்பேடிக்கு இதனை அறிவுறுத்தாமல் மவுனம் காத்தனர். சகோதரத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் கிரண்பேடிக்கு உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் தலையிட கூடாது என அவரது அதிகார திமிருக்கு ஒரு குட்டு' வைத்ததும் குறிப்பிடத்தக்கது. மக்களின் நன்மதிப்பை இழந்து, தன் சுய அடையாளத்தை இழந்து   புதுச்சேரியை விட்டு கிரண்பேடி வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கடந்த 2019 சூன் 4 ஆம் தேதி வார பத்திரிக்கையில் ஆளுநர் கிரண்பேடியின் சிறுபான்மையினர் எதிர்ப்பு மனநிலையை குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.

தற்போது அதே பாணியில் பொறுப்பு துணை நிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனும் இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தி காவி அரசியல் செய்து கொண்டிருக்கிறார். காவி திருவள்ளுவர் சிலையை ராஜ் நிவாஸ் நுழைவு வாசலில் வைத்தது மட்டுமல்லாமல் புதுசா தினுசா சித்திரை விழா என்றெல்லாம் கொண்டாடி மகிழ்வதும், ஊரில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் சென்று தான் தீவிர இந்துத்துவா ஆதரவாளர் என்பதை பரைசாற்றுவதுடன் ஒரு குடமுழுக்கின் போது காஞ்சிபுரம் பீடாதிபதி விஜயேந்திர் பட்டுத்துணியை தூக்கிப்போட லாவகமாக 'கேட்ச்' பிடித்து தான் வகிக்கக் கூடிய பதவிக்கு இழுக்கை சேர்த்திருக்கிறார். ஆளுநர் தமிழிசையின் இத்தகைய நடவடிக்கைகளை பார்க்கும் போது தொடர்ந்து சிறுபான்மையினரை புறக்கணிப்பது தெளிவாக தெரிகிறது. 

கடந்த 5 ஆண்டுகளாக முறையாக இப்தார் நோன்பு துறக்கும் மரபு நிகழ்ச்சியை முறையாக கிரண்பேடி நடத்தவில்லை. தமிழிசை அவர்கள் சென்ற ஆண்டு தெலுங்கானாவில் மட்டும் ரமலான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். புதுச்சேரியில் தற்போது வரை எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. எந்த அறிவிப்பும் தற்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு மக்களையும் ஒரு சேர அரவணைத்து செல்வது தான் ஆளுநரின் தலையாய கடமை. பிரிவினையை தூண்டி இலாபம் தேடும் முயற்சிகள் புதுவையில் செல்லாது. 

Tr Gayathri Srikanth 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!