புதுச்சேரி பெண்களின் அரசியல் பயணம்!
வாடி ராசாத்தி!
நமது நாட்டின் மக்களாட்சிக்கு வயது 69. இதில் பெண்கள் தங்கள் உரிமைகளை பெற கடந்து வந்த தூரம் மிக அதிகம். அதில் வளர்ச்சியும் வீழ்ச்சியையும் சேர்ந்தே பார்த்திருக்கிறார்கள். நமது மக்களாட்சியின் அரசியல் நடைமுறைகளிலும், மக்கள் தொகையிலும் சரி பாதியாக இருக்கும் பெண்களின் அரசியல் ஈடுபாடு எத்தகையது??? எத்தனை பேர் அரசியல் வானில் பறக்கிறார்கள்?
அரசியல்வாதியாக ஒரு பெண் உருவாவது அடுத்த கட்டம். பெண்கள் ஓட்டுரிமைக்கே பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். மதராஸ் மாகாணத்தில் 1921ல் சொத்து வைத்திருந்த பெண்கள் மட்டுமே ஓட்டளிக்க வாய்ப்பு பெற்றனர். ஆனால் இங்கிலாந்தில் 1928ம் ஆண்டு தான் வாக்குரிமையை பெண்கள் பெற்றனர்.
"அரசியலில் இறங்கினால் பெயர் கெட்டுவிடும். எங்கள் குடும்பத்தினரே எங்கள் ஒழுக்கம் பற்றிய பல பிரச்சனைகளை எழுப்புவார்கள், மரியாதை கிடைக்காது, அரசியலில் இறங்க பெரிய பணக்கார குடும்பமாக இருக்கணும்" இவைதான் பெரும்பாலும் பெண்களிடம் இருந்து வரும் பதில்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதா??? பலமான பின்புலம் இல்லாமல் பெண்களால் அரசியலில் ஈடுபட முடியாதா? இன்று அரசியல் வானில் மின்னும் பல பெண்கள் பலமான பின்புலம் பெற்றவர்கள் தான். வெகுசிலரே சாதாரண நிலையிலிருந்து வந்தவர்கள்.
செல்வாக்குமிக்க குடும்பம், நிறைய படிப்பு, சமூக அங்கீகாரம், போதுமான அளவு பணம் இவை அமைந்த பெண்களே அரசியல் களத்தில் களமாட முடியும் என்ற தவறான எண்ணம் உள்ளது. பொதுவாக மேயர், எம்பி, சமஉ, பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், போன்ற பதவிகளை பெண்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பதவிவகிக்கும் பெண்களை அவர்களின் தந்தையோ, உடன் பிறந்தவர்களோ, கணவனோ, அல்லது உறவினர்களாலோ ஆட்டுவிக்கப்படும் பதுமைகளாகவே விளங்குகிறார்கள். இதில் சிலர் விதிவிலக்கு.
இது என் நாடு, என் மாநிலம். இதை வாழும் தகுதியுடையதாகச் செய்ய நானும் பங்களிக்க வேண்டும். எனது நாடு எனது மிகப்பெரிய குடும்பம். அந்த குடும்பத்துக்கும் பொருப்புள்ள குடிமகளாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து தரப்பு பெண்களிடமும் பிறந்தால் தான் பெண்களுக்கான சமத்துவம் பிறந்து சமூக பாலின வேறுபாட்டை களைய முடியும்.
பயணம் நீண்ட தூரம், பாதையும் கரடு முரடு. ஆனால், பயணித்தால் மட்டுமே தான் ‘உரிமை’ என்ற வீட்டை அடைய முடியும். பெண்கள் அதிகாரத்திற்கு வரும் காலமே ஏழை எளியோருக்கு வசந்தகாலமாகும். அரசியல், பொருளாதாரம், மக்களின் அடிப்படை தேவைகளை பற்றிய புரிதல் இருந்தாலே போதுமானது. பெண்களை நம்பி வீட்டை ஒப்படைத்தது சமூகம். இன்றைய சூழலில் நாட்டையும் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நாட்டிலுள்ள குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, குறிப்பறிந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் ஆற்றல் பெண்களுக்கு இயற்க்கையிலேயே உள்ளது. பெண்களுக்கு 33% சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அமல்படுத்தும் தினம் உண்மையான இந்திய பெண்களுக்கான மகளிர் தினம். 50% பெண்களுக்கான ஒதுக்கீடு உலக நாடுகளிடையே இந்தியாவை தனித்தன்மை வாய்ந்த நாடாக உருவாக்கும்.
என் மகள் டாக்டராக ஆகணும், இன்ஜினியர் ஆகணும்னு சொல்லும் காலம் போய் அவள் கவுன்சிலராகணும், சட்டமன்ற உறுப்பினராகணும், வார்ட் உறுப்பினராகணும்னு கனவு சின்னதோ பெருசோ ஊருக்கு உழைக்கும் பிள்ளையாக வழிகாட்ட வேண்டும். அரசியல் பெண்களுக்கான இடம் இல்லை என்று சொல்லாமல் ஆற்றல்மிகு ராணிகளின் வரலாறு, போராளிகளின் வரலாறு மற்றும் பெண் அரசியல் ஆளுமைகளை அறிமுகப்படுத்தி அரசியல் பெண்களுக்கான இடம் என்று உறுதியாய் சொல்ல வேண்டும்.
புதுச்சேரி அரசியலில் பெண்கள்
புதுச்சேரியில் 1963 ஆம் சட்டப்பேரவை அமையப் பெற்றதில் இருந்து இதுவரை 11 பெண்களே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். 2 பெண்கள் மட்டுமே நியமன சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். திருமதி.ரேணுகா அப்பாதுரை மற்றும் சரஸ்வதி சுப்பைய்யா அவர்கள் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளை செய்துள்ளனர்.
2001 ஆம் ஆண்டு 11வது சட்டப்பேரவைக்கு நியமன சட்டமன்ற உறுப்பினராக மேரி தெரேசா தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 ஆண்டுகள் கழித்து தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்ட வாய்ப்புகளைத்தாண்டி 2016 சட்டப்பேரவை தேர்தலில் விஜயவேணி, கோபிகா, சந்திர பிரியங்கா, கீதா ஆனந்தன் என நான்கு பெண் சட்டமன்ற உறுப்பினர்களை நாம் கொண்டிருந்தாலும் செயல்படாத நிலையிலேயே பெண் சமஉக்களாக இருக்கிறார்கள்.
பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து பெரிய கட்சிகளும் தலா ஒரு பெண்ணுக்கு மட்டுமே வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50% வாய்ப்பு கொடுத்தது பாராட்டுக்குரியது என்றாலும் கட்சித் தலைமை பெண்களை எப்படி நடத்துகிறது, எப்படி எல்லாம் பெண்ணுரிமை பேசுகிறது என்பதை உற்று கவனிக்க வேண்டியிருக்கிறது.
புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள் தனது கட்சியில் உள்ள பெண்களுக்கு மேடைகளில் கூட நிற்கவோ, பேசவோ அனுமதி தருவது கிடையாது. தனது கட்சியில் ஆதாயம் தரும் பல பதவிகளையும் முக்கிய பொருப்புக்களையும் ஆண்களுக்கே கொடுத்து அழகு பார்க்கிறார்கள்.
புதுச்சேரி அரசியலில் வாய்ப்பு மறுக்கப்படும் பெண்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். மேலும் தீவிர அரசியலில் உள்ள பெண்கள் கூட பல நேரங்களில் தங்கள் கருத்துக்களை வெளியே சொல்ல தயங்குவதாலும், நாளேடுகள் படிக்காததாலும், அரசியல் பற்றி போதிய விழிப்புணர்வு பெற முயற்சி செய்யாததாலும், அவர்களுக்கு அரசியலை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படாமலேயே போய்விடுகிறது.
புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுக்க பெண்களே நிர்வகிக்கும் கட்சிகளான காங்கிரஸ், ஜெ இருந்த போது கூட அதிமுகவில் அக்கறை காட்டவில்லை. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் நியமனம் செய்த 3 நியமன சட்ட மன்ற உறுப்பினர்களில் கூட ஒரு பெண்ணை பிரநிதியாக தேர்ந்தெடுக்கப்படாதது எங்களின் சாபக்கேடு. ஒரு பெண்ணே பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்காததை என்ன சொல்ல????
நிதி நிர்வாகத்தில் பெண்கள் பங்கு பெற்றால் வெளிப்படையான அரசு அமையும்...
தற்போது பெண்களை மிரட்டுவதும், அவ்களுக்கான உரிமைகளை வழங்குவதிலும், வாய்ப்புகளை தட்டிப்பரிப்பதிலும், பெண்களை வளர விடாத சூழ்நிலைகளை பெரிய முதல் சிறிய கட்சிகள் வரை உள்ளது வேதனையளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். 2021ஆம் ஆண்டு பெண்களின் பிரதிநிதத்துவத்தை முன்மொழிய வேண்டும்.
மாற்று அரசியலை பற்றிய சிந்தனையும், புரிதலும் 20 வயதிலிருந்து 45 வயதிற்கு உட்பட்ட ஒரு பெருங்கூட்டம் தொடர்ந்து பேசிக்கொண்டே வருகிறது. அதை பற்றிய பேச்சுக்களும், விவாதங்களும் நீண்டு கொண்டே போகின்றது. அரசியல் ஆர்வத்துடனும் துடிப்புடனும் தன்னம்பிக்கையோடு செயல்படும் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் இணையம், சில இக்கட்டான கூறுகளைக் கொண்டிருந்தாலும், அது பெரும் அச்சுறுத்தல் அல்ல என்பதை மனதில் கொண்டு, சுதந்திரமாகவும், கவனமுடனும், பொறுப்புணர்வுடனும், இணையம் வழியே பெண்கள் அரசியல் செய்ய மூத்த அரசியல்வாதிகளின் மூலம் வரலாற்று உண்மைகளை தெரிந்து புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் புதியதோர் மாற்றத்தினை உருவாக்க படிப்பினைகளாக மாற்ற வேண்டும்.
அரசியல் ஆண்களுக்கானது மட்டுமின்றி பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் அரசியல் ஈடுபட்டு மக்களுக்கான சேவைகளை செய்யும் அரசியல் கட்டமைப்பை உருவாக்க பெண்காள் மத்தியல் பாலின சமத்துவம், மற்றும், பாலின கருத்தியலாக்கத்தை விதைக்க முற்போக்கு அரசியல் ஆர்வலர்களும், மூத்த அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும். ஆண் பெண் சரிநிகர் சமானம் என்று எத்தனை மேடைகளில் பேசினாலும் அரசியலில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே இந்த இலக்கினை நாம் அடைய முடியும்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 2022 நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு பெண்களுக்கு 50% இடமளித்தது மட்டுமின்றி 11 பெண் மேயர்களை தமிழகத்தில் உருவாக்கிய திராவிட மாடல் புதுச்சேரியிலும் வலுப்பெற வேண்டும்! பெண்கள் அதிகார மையத்திற்கு வர வேண்டும்!
Tr Gayathri Srikanth
கருத்துகள்
கருத்துரையிடுக