இந்திய தன்னாட்சி அமைப்புகளைச் சிதைக்கும் மோடி அரசு!
மோடி ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை ஆராய்ந்தால், இந்திய ஆட்சிமுறையின் தன்னாட்சி அமைப்புகளை முற்றாக அடிபணிய வைத்தது மட்டுமே. அரசியல் சாசனத்தால் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்ட அமைப்புகளான தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, இந்திய தலைமை கணக்காயம் (சி.ஏ.ஜி.), மத்திய புலனாய்வு ஆணையம் (சி.பி.ஐ.) மற்றும் அகில இந்திய மருத்துவ கவுன்சில், யு.ஜி. சி., தன்னாட்சி உரிமை பெற்ற கல்வியியல் உயராய்வு நிறுவனங்கள் (ஜே.என்.யு., ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகம் போன்றவை) போன்றவையும் இவற்றில் அடங்கும். இப்போது அந்த வரிசையில் புதிய கல்விக் கொள்கை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்தம் என கல்வித்துறையிலும் தகவல் ஆணையத்தின் சிரத்தன்மையையும் நீர்த்துபோகச் செய்யவிருக்கிறது மத்திய அரசு.
தன்னாட்சி உரிமை பெற்ற அனைத்து அமைப்புகளையும் அதன் வடிவமைப்பினைகளையும் மீட்க முடியாத அளவுக்குச் சிதைத்துக் கொண்டிருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய வங்கியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் இடையூறாகவும், ஆபத்தாகவும் மாறியது அனைவருக்கும் நினைவிருக்கும். உலகம் போற்றும் பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜனுக்கு கடும் நெருக்கடி கொடுத்து ரிசர்வ் வங்கியை விட்டு வெளியேற்றி அடுத்ததாக வந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் வரலாறு காணாத நெருக்கடி கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் நினைவிருக்கும்.
பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு எத்தனையோ விடயங்களை செய்திருக்கிறது. நிலுவையிலுள்ள சம்பளம் வழங்காதது, தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் தகவல் தொடர்பு அலுவலகங்களளுக்கும், தனியார் கட்டடங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள தகவல் பரிமாற்ற உயர் கோபுரத்துக்கான வாடகையும் வழங்கப்படாமல் இருப்பது, தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்காமல் இருப்பது மற்றும் ஜியோ நிறுவனத்தை தூக்கிபிடித்திருக்கும் அம்பானியின் அபிமானி மோடி என சொல்லிக்கொண்டே போகலாம்.
தேர்தல் ஆணையம் எனும் தன்னாட்சி அமைப்பு இந்திய மொழி,கலாச்சார சிறுபான்மையினரின் பாதுகாவலனாக இருக்கவேண்டுமென்பதே அரசியல் சாசன அமைப்பை வழங்கியதன் நோக்கம். தேர்தல் காலத்தில் மோடியும் அவரது கேப்டன் அமித் ஷாவும் நிகழ்த்திய அத்துமீறல்கள் ஏராளம். வரலாறு காணாத அளவிலான வருமானவரித் துறை சோதனைகள், எந்தவித வெட்கமுமின்றி எதிர்க்கட்சிகள் மீது மட்டும் நடத்தியது. மக்களவைத்தேர்தல் ஒன்றை மோடி / அமித்ஷா கட்டுப்பாட்டில் மற்றும் தலைமையில் இயங்கிய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது.
தேசத்தின் நான்காம் தூணாக செயல்பட வேண்டிய ஊடகத்துறையும் தனது தனித்தன்மையை இழந்து மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் உணர முடிகிறது. முற்படுத்தப்பட்டோரில் வறியவர்க்கான (ஆண்டிற்கு எட்டு லட்சம் ரூபாய் வருவாய் பெறும் வறியவர்) 10% இடஒதுக்கீடு தொடங்கி, NEET/CUET தேர்வு, தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதும், பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த சாமானியனின் ஆயுதமான தகவல் அறியும் உரிமை சட்டத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறது பாஜக தலைமையிலான அரசு.
எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தலின் போது, இந்திய ராணுவமும் தனித்த கட்டுப்பாடுகளின்கீழ் இயங்கியதையும் நாம் மறந்துவிட முடியாது. இனிவரும் ஐந்து ஆண்டுகள் மக்களாட்சிக்கான மாபெரும் சவாலாக இருக்கப்போகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மக்களாட்சியில் மக்களுக்கே முழு அதிகாரம், அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஒட்டு மொத்த மக்களையும் சர்வதிகாரத்தின் கீழ் கொண்டு வர முயற்சி செய்வது ஜனநாயகப் படுகொலையாகும். மீண்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் அதிகார சுதந்திர புரட்சி நிச்சயம் வெடிக்கும்.
Tr Gayathri Srikanth
கருத்துகள்
கருத்துரையிடுக