ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளைநிலங்கள் உப்பளங்களாக மாறும்!

 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பதன் காரணம் என்ன?



கார்பன் மற்றும் ஹைட்ரஜனை மட்டும் உள்ளடக்கியது ஹைட்ரோ கார்பன். இந்த ஹைட்ரோ கார்பன்கள் ஆக்சிஜன் உதவியோடு எரிபொருளாக பயன்படுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன்கள் தான். பூமிக்கடியில் இந்த ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் புதுச்சேரியும் ஒன்று.

புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக புதுவை அரசிற்கு கடிதம் வந்ததையடுத்து, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு வழங்காது என முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு திட்டவட்டமாக மறுத்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதியது மட்டுமல்லாமல் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து புதுச்சேரியில் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டமும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள், சுற்று சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3500 மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். புதுச்சேரி, அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வேதாந்தா நிறுவனமோ அல்லது மத்திய அரசு இராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் உறுதிப்பட திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படாமல், மத்திய அரசிற்கு எதிராக போராட தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரோ கார்பனும் அரசியலும்

ஹைட்ரோகார்பன் போராட்டங்களுக்கு எதிராக பாஜகவினர் கூறி வரும் பொய்களில் முதன்மையானது, இத்திட்டத்தை நாங்கள் கொண்டுவரவில்லை, காங்கிரசும் தி.மு.க.வும்தான் கொண்டு வந்தன என்பதாகும், காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் ஏற்கெனவே உள்ளன என்பது உண்மை. மீத்தேன் திட்டத்தை அனுமதித்துப் பின்னர் அதற்காக தி.மு.க. வருத்தம் தெரிவித்ததும் உண்மை. காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுவுக்கான ஆய்வுகளை ஓ.என்.ஜி.சி. மேற்கொண்டதும் உண்மை.

ஆனால் காங்கிரசு, தி.மு.க.வின் மேற்கண்ட நடவடிக்கைகளும், தற்போது மோடி கொண்டு வந்திருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் ஒன்றுதான் என்று பாரதிய ஜனதா சொல்கிறதே, அது கடைந்தெடுத்த பொய். அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் எடுப்பது எண்ணெயா, எரிவாயுவா என்று பார்க்கும் அதிகாரமும், எவ்வளவு எடுக்கிறார்கள் என்று சோதிக்கும் அதிகாரமும் இதற்கு முந்தைய அரசின் துரப்பணவுக் கொள்கையில் (New Exploration and Licencing Policy) அரசாங்கத்திடம் இருந்தது.

மார்ச் 2017-இல் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலிருந்து, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருக்கின்ற புதிய கொள்கை (Hydrocarbon Exploration and Licencing Policy – HELP), “கிணற்றை ஏலம் எடுக்கும் கார்ப்பரேட் கம்பெனி, அதிலிருந்து எண்ணெயோ, எரிவாயுவோ, மீத்தேனோ, ஹைட்ரோகார்பனோ எடுத்து விற்கலாம். எதை எடுக்கிறார்கள், எவ்வளவு எடுக்கிறார்கள் என்று அரசு கண்காணிக்காது. அவ்வாறு செய்வது கார்ப்பரேட்டுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருப்பதால், கண்காணிப்பை நீக்கவிட்டோம்” என அறிவிக்கிறது.

வடக்கே பாண்டிச்சேரியில் தொடங்கி தெற்கே மன்னார் வரை நிலத்தில் 25,000 ச.கிலோ மீட்டரும், கடலில் 30,000 ச.கிலோ மீட்டரும் கொண்டது  காவிரிப்படுகை (Cauvery Basin) என்ற அவர்கள் குறிப்பிடும் பகுதி. காவிரிப்படுகையில் இவர்கள் எடுக்கத் திட்டமிட்டிருக்கும் ஹைட்ரோ கார்பனின் பெயர், ஷேல் எரிவாயு.

இந்தியாவில் 584 டிரில்லியன் கன அடி ஷேல் வாயு இருப்பதாகவும் அதில் 96 டிரில்லியன் கன அடி காவிரிப்படுகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிக செலவில்லாமல் இலாபகரமாக எடுக்கத்தக்கதாக 9 டிரில்லியன் (9,00,000 கோடி) கன அடி ஷேல்வாயு காவிரிப்படுகையில் தான் உள்ளது. ஷேல் வாயுக் கிணறுகள் ஏற்படுத்தும் பாதிப்பு பன்மடங்கு அதிகமானது.

இந்த துளைகளுக்குள் 78 விதமான வேதிப் பொருட்களும் மணலும் கலந்த தண்ணீர், ஒரு சதுர அங்குலம் பாறையின் மீது சுமார் 6 டன் அழுத்தத்தைக் கொடுக்கின்ற வேகத்தில் செலுத்தப்படும். வேதிப்பொருட்கள் கலந்த மணல் பாறைகளின் மெல்லிய துளைகளுக்குள் இருக்கும் எரிவாயுவை விடுவித்து மேல்நோக்கி அனுப்பும்.

இந்த ஆழ்துளைகளின் சுவர்கள், இரும்பாலும் கான்கிரீட்டாலும் கவசமிடப்படுவதால் கசிவு ஏதும் ஏற்படாது என்று எரிவாயு நிறுவனங்கள் கூறிக்கொண்டாலும், கசிவு ஏற்படுவது உண்மை என்று அமெரிக்காவிலேயே நிரூபணமாகியிருக்கிறது.

எரிவாயுவுடன் மீத்தேனும் சேர்ந்தே வெளியேறும் என்பதால், அது நிலத்தடி நீருடன் காற்று மண்டலத்திலும் கலந்து அதனை நஞ்சாக்கும். பாறைகளின் இடுக்குகளில் பல பத்தாயிரம் ஆண்டுகளாக பூமியினுள் தங்கியிருக்கின்ற கடல் நீர், பன்மடங்கு உவர்த்தன்மை வாய்ந்தது. கதிர் வீச்சையும் வெளிப்படுத்தக் கூடிய தன்மை கொண்டது. இந்தக் கடல் நீரும் மேல் நோக்கி வந்து நிலத்தடி நீருடன் கலக்கும்.

பூமிக்குள் செலுத்தப்பட்ட கோடிக்கணக்கான லிட்டர் வேதிப்பொருட்கள் கலந்த நீரீல், மெத்தனால், ஹைட்ரஜன் புளூரைடு, கந்தக அமிலம், புற்று நோயை உருவாக்கும் பி.டெக்ஸ், காரீயம், பார்மால்டிஹைடு ஆகியவையும் அடக்கம். புற்றுநோயை உருவாக்குபவை என்று வகைப்படுத்தப்பட்ட 650 இரசாயனப் பொருட்களை, சுமார் ஒரு கோடி காலன் அளவுக்கு அமெரிக்க ஷேல் வாயு நிறுவனங்கள் பூமிக்குள் செலுத்தியிருப்பதாக 2011இல் அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது. மாசுபட்ட இந்த நீரை மீண்டும் அவர்கள் பயன்படுத்துவதில்லை. பென்சில்வேனியாவிலும் மேற்கு வர்ஜீனியாவிலும் இக்கழிவுநீர் ஆறுகளில் விடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. நம் ஊரில் என்ன நடக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

பூமியில் குப்பையைப் புதைப்பது போல, அருகாமையிலேயே இன்னொரு கிணறு தோண்டி, கழிவுநீரை பூமிக்குள் செலுத்தும் வாய்ப்புகள் அதிகம். இதனால் நிலத்தடி நீர் நஞ்சாகி, தண்ணீர் - முதன்மையான பிரச்சனையாக உருவாகும். நீரியல் விரிசல் முறைக்கு மிகப்பெருமளவு தண்ணீர் தேவை. ஷேல் கிணறுகள் இருக்கிற நீரை உறிஞ்சுவதுடன், மிச்சமிருக்கும் நீரையும் நஞ்சாக்கி விவசாயத்தையும் குடிநீரையும் அழிப்பதால் தான் எல்லா நாடுகளிலும் இதனை மக்கள் எதிர்க்கின்றனர்.

2022இல் எண்ணெய் இறக்குமதியில் 10% குறைக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காகத்தான், காவிரி உள்ளிட்ட படுகைகளைப் பாலைவனமாக்க முயற்ச்சிக்கிறார்கள். இந்தப் பேரழிவுக்கு மோடி சூட்டியிருக்கும் பெயர் வளர்ச்சி. அந்த வளர்ச்சிப் பாதையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, இந்த அழிவுப்பாதையிலிருந்து நாம் நம் நாட்டையும் மாநிலத்தையும் மீட்க நம் தலைமுறைகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடியே ஆகணும்.

Tr Gayathri Srikanth

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீயும் அயலி! நானும் அயலி!

தாலி இழவிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?

புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!